March 10, 2007

கவிமழை - சு.சா.அரவிந்தன்

காலம்

எண்சீர் கழிநெடிலடி விருத்தம்

குளுமையும் குழந்தையும் ஓய்வுபெறுங் காலம்
இளமையும் முதுமையும்; இடம்மாறுங் காலம்
தற்பெருமை பேசவே நாநீளுங் காலம்
தன்னடக்கம் நாவடக்கம் தலைமறையும் காலம்
நேர்மையினை அப்பாவியாய் பரிகசிக்கும் காலம்
நேரான வஞ்சகத்தை ஆதரிக்குங் காலம்
தினங்களால் உறவுகளை இழிவாக்குங் காலம்
மனிதநேயம் எதுவென்று கேள்விகேட்குங் காலம்

காதலும் காமமும் ஒன்றென்னும் காலம்
காதலையே பொழுதுபோக்காய் மாற்றிக்கொண்ட காலம்
மானங்காக்க ஆடையென மறந்துபோன காலம்
மனமும்நம் ஆடைபோல் சுருங்கிப்போன காலம்
கடவுளையே கடைப்பொருளாய் ஆக்கிவிட்ட காலம்
கடமைக்காய் இறைவனையே வணங்குகின்ற காலம்
மன்னிக்கும் குணத்திற்கோ தேய்பிறைக் காலம்
மறக்காமல் பழிவாங்கல் ஓங்குகின்ற காலம்

தாய்மொழியும் தாயென உணர்வது எக்காலம்
தானென்ற எண்ணம் அழிவது எக்காலம்
நலம்நாடும் இலக்கியத்தை படிப்பது எக்காலம்
நாகரிக கலப்பினை நசுக்குவ தெக்காலம்
பெரியோர்க்கு மரியாதை தருவ தெக்காலம்
பொதுஇடத்தில் கண்ணியமாய் இருப்ப தெக்காலம்
மனிதநேயம் உலகெங்கும் தழைக்கின்ற எக்காலம்
மேற்சொன்ன யாவையும் சரியாகும் அக்காலம்

சு.சா.அரவிந்தன்
----------------------------------------------
இருண்மை


இயல்பாய்
இருப்பவனுக்குப்
பைத்தியம் என்றுபெயர்
ஓர் இசை மெடடில்இயைந்து
கிடப்பவனுக்குஇசைப் பைத்தியம்
ஆடையேஒருஅவமானச் சின்னம்
இங்குயாருக்கோ பொருந்தும்
ஆடையையார் யாரோஅணிந்து கொண்டு அலைகிறார்கள்
உள்ளம்எப்போதும்
வெளிச்சம் விரும்புவதில்லை
அதனால் தான்வார்ததைகள்
நாகரிகப் போர்வைக்குள்ஒளிந்து கொள்கின்றன
இயல்பாய்இருப்பதற்குஇருண்மையே



முனைவர் .இளங்கோவன்
====================================================================
முகவரியே

முகத்தால் முகர்ந்த முகவரியே - என்இதயத்தில் இடம்பிடித்த
இளமையே கடுகில் கடலை நுழைத்தாற்போற் -
என்மனதில் மாற்றம் புரிந்தாயே
மனம் நிறைந்த பாராட்டு -
ஒருகணம் நிகழ்ந்த பரிமாற்றம்
எங்கிருந்தாய் இத்தனை நாள்?
ஏன் வந்தாய் என் கண் முன்னால்சிந்தை
ஏதுமின்றிஏற்றுக்கொண்டேன்
உன் காதலை
என் பார்வையில்
ஏற்றுக்கொண்டேன்
எடுத்துக் கொண்டேன்
உன் இதயத்தை
என் அன்பால்
எடுத்துக் கொண்டேன்
அள்ளித் தந்தேன்
என் அன்பை உன் நினைவில்
அள்ளித் தந்தேன்
அள்ளிக் கொண்டேன்
உன் அழகை என் கண்ணால்
அள்ளிக் கொண்டேன்

சு.சா.அரவிந்தன்


email us @ aranss@myway.com

1 comment:

Unknown said...

Really good expecting moew